Translate

Showing posts with label விரதம். Show all posts
Showing posts with label விரதம். Show all posts

Tuesday, September 22, 2020

நவராத்திரி!



ம்பிகையைக் கொண்டாடும் காலம் நவராத்திரி. சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி. ஆனால், அம்பிகைக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. அனைத்து இயக்கங்களுக்கும் ஆதார சக்தியாக இருப்பவள் அம்பிகையே.

நவ என்றால் ஒன்பது என்று மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி என்ற பொருளும் உண்டு. நவராத்திரி ஒன்பது நாள்களும் பூஜை செய்து தேவியை வழிபட்டால், நம் மனதில் புத்துணர்ச்சி பெருகும். மனம் செம்மையாகும். செம்மையான மனதின் எண்ணங்களும் செம்மையாகும். செயல்களும் செம்மையாகும்; வாழ்க்கையும் செம்மையுடன் சிறப்பாகும். நவகிரகங்களினால் ஏற்படக்கூடிய சகல விதமான தோஷங்களையும் நீக்கும்.  எனவே நவராத்திரி காலங்களில் அம்பிகையைப் பக்தி சிரத்தையுடன் வழிபடவேண்டும். 

Saturday, September 19, 2020

ஆச்சியின் விரதம்!

ஆச்சி ஆச்சி என்டு படலையில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டு ஆச்சிக்கு முழிப்பு வந்தது. நாலு நாளாக ஆச்சிக்கு நாரி நோவு அதுதான் கொஞ்சம் அசந்து படுத்துட்டா போல, இல்லாட்டி ஐந்து மணிக்கெல்லாம் எழும்பிடுவா ஆச்சி. மெல்லமா எழும்பிப்போய் படலையை எட்டிப்பார்த்து யாரது என்டா ஆச்சி. நான் அன்னம் என்டு பதில் வரவே, படலையைத் திறந்து, வாடியம்மா வா என்டா ஆச்சி. அன்னம்தான் ஆச்சியின் வலக்கை. இப்போ நாரிநோவு எப்படி இருக்கு என்டு அன்னம் கேட்க, கொஞ்சம் பரவாயில்லை என்டா ஆச்சி. அன்டைக்கு முதலாவது புரட்டாதிச்சனி, ஆச்சி எப்பவும் ஆச்சாரமாக இருப்பா. அதுவும் விரதங்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா? அதுதான் அன்னம் விடியமுதலே ஆச்சி வீட்டே.  தேத்தண்ணி போட்டுத்தாரேன் குடிச்சுட்டு வேலையைப்பாரு என்டு அன்புக்கட்டளை போட்டா ஆச்சி. ஆச்சியின் இந்த குணமே அனைவரையும் அசத்தும். அன்னம் தேத்தண்ணியைக் குடிச்சிட்டு தன்டை வேலையைத் துவங்க பொழுதும் விடிஞ்சுடுத்து. ஆச்சிக்கு எல்லாமே சுத்த பத்தமாக இருக்கோனும் என்டு அன்னத்துக்கு நல்லாத்தெரியும். அன்னமும் லேசுப்பட்ட ஆள் இல்லை, கட கட என்டு எல்லா வேலைகளையும் செய்வத்தில் கில்லாடி. மள மளவென வீடு, வளவு கூட்டி, வீட்டைக் கழுவி, அடுப்படியை மெழுகி, விரத நாட்களில் சமைக்கும் பாத்திரங்களை அலுமாரியில் இருந்து எடுத்து அதையும் நல்லா கழுவி, சாமி அறையில் சாமிப்படங்களைத் துடைத்து, விளக்குகளை விளக்கி முடிக்க மணி ஒன்பது இருக்கும். ஆச்சி விரததினங்களில் காலமை சாப்பிடமாட்டா. ஆனால் அப்புக்கும், அன்னத்துக்கும் பலகாரம் செய்து கொடுக்கும் பவளத்திடம் இடியப்பமும், சம்பலும், சொதியும் வாங்கினா. அப்புவையும், அன்னத்தையும் சாப்பிட வைச்சு, சுடச் சுட பால் காய்ச்சி அதில் கோப்பி போட்டு இருவருக்கும் கொடுத்து தனக்கும் சுடுதண்ணிப்போத்தலில் விட்டு வைச்சா. ஆச்சியும் அன்னமும் குளிச்சு முடிச்சு, சமைக்க துவங்கியாச்சு.  விரத சாப்பாடு ஆச்சே.... சும்மா கம கம என நாலாபக்கமும் வாசனை பரவியது. பன்னிரண்டு மணிக்கெல்லாம் சாப்பாடு தயார். காக்காக்கு நல்லெண்ணெய் விட்டு விரதச்சாப்பாடு படைத்து, மூவரும் வாழையில் சாப்பிட்டனர். அன்னத்துக்கு ஒரு கிண்ணத்தில் சாப்பாடு போட்டு கொடுத்து விட்டா ஆச்சி. அப்புவும், ஆச்சியும் விறாந்தையில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் இருந்து வெத்திலை போட்டுக்கொண்டிருந்தனர். அப்போ ஆச்சி பின்னேரம் ஒருக்கா சிவன்கோயிலுக்குப் போய் சனீஸ்வரனுக்கு எள்ளுச்சட்டி எரிப்பம் என்டு சொல்ல அப்புவும் ஓம் ஓம் என்று தலையாட்டினார்.