Translate

Showing posts with label அப்பு. Show all posts
Showing posts with label அப்பு. Show all posts

Saturday, September 19, 2020

ஆச்சியின் விரதம்!

ஆச்சி ஆச்சி என்டு படலையில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டு ஆச்சிக்கு முழிப்பு வந்தது. நாலு நாளாக ஆச்சிக்கு நாரி நோவு அதுதான் கொஞ்சம் அசந்து படுத்துட்டா போல, இல்லாட்டி ஐந்து மணிக்கெல்லாம் எழும்பிடுவா ஆச்சி. மெல்லமா எழும்பிப்போய் படலையை எட்டிப்பார்த்து யாரது என்டா ஆச்சி. நான் அன்னம் என்டு பதில் வரவே, படலையைத் திறந்து, வாடியம்மா வா என்டா ஆச்சி. அன்னம்தான் ஆச்சியின் வலக்கை. இப்போ நாரிநோவு எப்படி இருக்கு என்டு அன்னம் கேட்க, கொஞ்சம் பரவாயில்லை என்டா ஆச்சி. அன்டைக்கு முதலாவது புரட்டாதிச்சனி, ஆச்சி எப்பவும் ஆச்சாரமாக இருப்பா. அதுவும் விரதங்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா? அதுதான் அன்னம் விடியமுதலே ஆச்சி வீட்டே.  தேத்தண்ணி போட்டுத்தாரேன் குடிச்சுட்டு வேலையைப்பாரு என்டு அன்புக்கட்டளை போட்டா ஆச்சி. ஆச்சியின் இந்த குணமே அனைவரையும் அசத்தும். அன்னம் தேத்தண்ணியைக் குடிச்சிட்டு தன்டை வேலையைத் துவங்க பொழுதும் விடிஞ்சுடுத்து. ஆச்சிக்கு எல்லாமே சுத்த பத்தமாக இருக்கோனும் என்டு அன்னத்துக்கு நல்லாத்தெரியும். அன்னமும் லேசுப்பட்ட ஆள் இல்லை, கட கட என்டு எல்லா வேலைகளையும் செய்வத்தில் கில்லாடி. மள மளவென வீடு, வளவு கூட்டி, வீட்டைக் கழுவி, அடுப்படியை மெழுகி, விரத நாட்களில் சமைக்கும் பாத்திரங்களை அலுமாரியில் இருந்து எடுத்து அதையும் நல்லா கழுவி, சாமி அறையில் சாமிப்படங்களைத் துடைத்து, விளக்குகளை விளக்கி முடிக்க மணி ஒன்பது இருக்கும். ஆச்சி விரததினங்களில் காலமை சாப்பிடமாட்டா. ஆனால் அப்புக்கும், அன்னத்துக்கும் பலகாரம் செய்து கொடுக்கும் பவளத்திடம் இடியப்பமும், சம்பலும், சொதியும் வாங்கினா. அப்புவையும், அன்னத்தையும் சாப்பிட வைச்சு, சுடச் சுட பால் காய்ச்சி அதில் கோப்பி போட்டு இருவருக்கும் கொடுத்து தனக்கும் சுடுதண்ணிப்போத்தலில் விட்டு வைச்சா. ஆச்சியும் அன்னமும் குளிச்சு முடிச்சு, சமைக்க துவங்கியாச்சு.  விரத சாப்பாடு ஆச்சே.... சும்மா கம கம என நாலாபக்கமும் வாசனை பரவியது. பன்னிரண்டு மணிக்கெல்லாம் சாப்பாடு தயார். காக்காக்கு நல்லெண்ணெய் விட்டு விரதச்சாப்பாடு படைத்து, மூவரும் வாழையில் சாப்பிட்டனர். அன்னத்துக்கு ஒரு கிண்ணத்தில் சாப்பாடு போட்டு கொடுத்து விட்டா ஆச்சி. அப்புவும், ஆச்சியும் விறாந்தையில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் இருந்து வெத்திலை போட்டுக்கொண்டிருந்தனர். அப்போ ஆச்சி பின்னேரம் ஒருக்கா சிவன்கோயிலுக்குப் போய் சனீஸ்வரனுக்கு எள்ளுச்சட்டி எரிப்பம் என்டு சொல்ல அப்புவும் ஓம் ஓம் என்று தலையாட்டினார்.   

 

பனிசும் ஆச்சியும்!

பக்கத்துவீட்டுப் பாட்டிக்கு பனிசு என்டால் நல்லாப்பிடிக்கும் என்டு ஆச்சிக்கும் தெரியும். நல்ல பனிசு கிடைச்சால் நாலு வாங்கிக்கொண்டுவந்து பாட்டிக்குக் கொடுப்பா. அன்டைக்கும் அப்படித்தான், பேக்கரிப்பக்கம் போன ஆச்சி அப்புக்குப் பிடித்த ஜாம்பனிசும், பாட்டிக்குப் பிடித்த கறிபனிசும் வாங்கிக்கொண்டு வந்தா. பாட்டிக்கு நல்ல சந்தோசம். அப்புவும் ஜாம்பனிசை தேத்தண்ணியில் தோச்சு சுவைத்துச் சாப்பிட்டார்.

தேநீரும், மொறு மொறுவும்!

மாலை நேரம் அடைமழையும் பெய்யுது, சாய்மனையில் படுத்திருந்து வானொலியில் ஒலிபரப்பிய பழைய பாடல்களை அப்பு கேட்டுக் கொண்டிருந்தார். ஆச்சியும் அவர் பக்கத்திலிருந்து வெத்திலை போட்டுக் கொண்டிருந்தா. ஆச்சியிடம் அப்பு இஞ்சாருமப்பா, ஒரு தேத்தண்ணி போடு என்றார். வேறு ஏதேனும் உங்களுக்கு வேணுமோ என்று ஆச்சி அப்புவிடம் கேட்க, பொக்கைவாய் சிரிப்புடன் அப்புவும் சொன்னாரே ஒரு பதில்...... ஆச்சி ஆடிப்போனா,  அதிர்ச்சியில் ஆசுப்பத்திரிக்கு போயிருப்பா என்டாலும் ஆச்சிக்கு இரும்பு மனசுதான். என்ன கேட்டார் அப்பு? தேத்தண்ணியும், தனக்குப்பிடித்த மொறு மொறு தட்டைவடையும்!