காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
யாபதியும் கருணைமார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்
மேகலையும் சிலம்பார்இன்பப்
போதொளிர் பூந்தாளிணையும் பொன்முடிச்
சூளாமணியும் பொலியச்சூடி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்குதமிழ் நீடுவாழ்க!
தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி ஒளிர்கின்றது. கைகளில் அணிந்த வளைகளாக வளையாபதி எனும் காப்பியம் திகழ்கின்றது. கருணை பொருந்திய அத்தமிழன்னையின் மார்பில் (சீவக)சிந்தாமணி எனும் ஆரம் ஒளிவீசுகின்றது. அன்னையின் மெல்லிய இடையில் (மணி)மேகலை அணியப்பட்டுள்ளது. அவளுடைய திருவடிகள் சிலம்பார் இன்பப் போதொளிர்பவை- அதாவது சிலம்புகளை (சிலப்பதிகாரம்) அணிந்த திருப்பாதங்கள். சிலப்பதிகாரத்திற்கு மட்டும் ‘சிலம்பார் இன்பப்போது’ எனும் அடைமொழி ஏன்? சிலப்பதிகாரத்தைப் படிப்பவர்கள் அடையும் மகிழ்ச்சி, பெருமிதம், ஆகியன இன்பமயமானவை. ஆகவே அத்தகைய பெருமை பொருந்திய சிலம்பினை அணிந்துள்ள தமிழ்த்தாயின் திருவடிகள் இன்பம் மிகுந்த அழகான மலர்களால் அர்ச்சிக்கப்படுவனவாம்.
பின், தனது பொன்முடியாகச் சூளாமணி எனும் பெரும்காப்பியத்தையே அணிந்துள்ளாள் தமிழன்னை. இவள் அரசியாக அமர்ந்து எந்தச் செங்கோலைக் கையில் ஏந்தியுள்ளாள் தெரியுமா? ‘நீதியொளிர் செங்கோலாய்’த் திருக்குறளைத் தாங்குகிறாள் இவள். தமிழன்னை செங்கோலோச்ச இதைவிடத் தகுதியான செங்கோல் எதுதான் உளது?
அத்தகைய தமிழ் நீடுவாழ்க!